மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுய ஊரடங்கு கடைபிடிப்பு: வீடுகளில் மக்கள் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு + "||" + Self-Curfew in Chengalpattu District Normal life is affected by people paralyzed in their homes

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுய ஊரடங்கு கடைபிடிப்பு: வீடுகளில் மக்கள் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுய ஊரடங்கு கடைபிடிப்பு: வீடுகளில் மக்கள் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வண்டலூர், 


இந்திய பிரதமர் மோடி கடந்த 19-ந் தேதி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவருவதன் எதிரொலியாக நம் நாட்டில் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் என்று பேசினார்.

எனவே பொதுமக்கள் யாரும் நேற்று வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியது..

இந்த நிலையில், பொதுமக்கள் சுய ஊரடங்கு ஏற்படுத்தி கொண்டதால், நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது. ஒரு சில இடங்களில் ஆங்காங்கே அவசர தேவைக்காக பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் மட்டுமே சென்று வந்தனர்.

ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஆகியவை முற்றிலும் ஓடவில்லை, அரசு பஸ்கள் இயங்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை-திருச்சி, மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிரமாக வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் பொதுமக்களிடம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மருந்துக்கடை, ஆவின் பால் கடைகள் மட்டுமே திறந்திருந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

செங்கல்பட்டு புதிய- பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், மீன், காய்கறி மார்க்கெட்டுகள் என அனைத்தும் மூடப்பட்டன.

இதேபோல செங்கல்பட்டை சுற்றியுள்ள பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, ஆலப்பாக்கம், ஆப்பூர், பரனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் கூட எந்த ஒரு கடைகளும் திறக்கவில்லை.

சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த இளைஞர்களை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரட்டி அடித்தனர். இதனை கண்ட மற்றவர்கள் ஓடோடி தங்களது வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், திருக்கழுக்குன்றம் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

கூவத்தூர் மற்றும் அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கூவத்தூர் கடலூர், காத்தான்கடை, பவுஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களிலும் கடைகள் திறக்கவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் மார்ச் 31-ந்தேதி வரை மூட மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் அரசு பஸ்கள், வாகன போக்குவரத்து இல்லாததாலும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்ன சாலைகள் வெறிச்சோடியது. அனைத்து உணவு விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. அனைத்து சிற்ப கலைக்கூடங்களும், மளிகை, காய்கறி கடைகளும் மூடப்பட்டிருந்தன. மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி, பட்டிபுலம்குப்பம், புதுஎடையூர்குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட ஈ.சி.ஆர். சாலையில் உள்ள 37 மீனவ கிராம மீனவர்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்து கூறுகையில்:-

நாட்டு நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பிரதமர் மோடி சுய ஊரடங்கு நடைபெற வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்களாகிய நாங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் நேற்று காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே முடங்கி இருந்தோம். எங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் எங்களை தற்காத்து கொள்ளவும், நாட்டு நலனுக்காகவும் சுய ஊரடங்கு கடைபிடித்தோம்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.