சுற்றுலா நகரமான காஞ்சீபுரம் வெறிச்சோடியது
சுற்றுலா நகரமாக அறியப்படும் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் சுயஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் நடமாட்டமில்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது.
காஞ்சீபுரம்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு நேற்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதையொட்டி, தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. சுற்றுலா நகரமாகவும், மாவட்ட தலைநகரான காஞ்சீபுரத்தின் முக்கிய பிரதான சாலையான காந்திரோடு தேரடியில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், பட்டு ஜவுளி கடைகள், மார்க்கெட் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது.
இதனால் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் இப்பகுதி, மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் என எந்த வாகனங்களும் இயங்கவில்லை. சங்கரமடம் மூடப்பட்டு இருந்தது. பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் மூடப்பட்டு இருந்தன. மேலும் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் உட்காரும் மேடைகள், பள்ளி, கல்லூரி, மார்க்கெட் பகுதிகளில், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
காஞ்சீபுரத்தில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளே இருந்து மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும், காந்திரோடு, பஸ்நிலையம், மூங்கில் மண்டபம், சங்கர மடம் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபத்தில் சில மருந்து கடைகள் இயங்கின. ஆனால் சின்ன காஞ்சீபுரம் போலீசார் மருந்து கடைகள் மூடப்பட வேண்டும் என்று போலீசார் கெடுபுடி செய்தனர். இதனால் மருந்து வாங்கமுடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story