கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி ஒத்துழைப்பு


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி ஒத்துழைப்பு
x
தினத்தந்தி 23 March 2020 3:45 AM IST (Updated: 23 March 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருவள்ளுர் மாவட்ட பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி ஒத்துழைப்பு கொடுத்தனர்.

திருவள்ளூர், 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் நேற்றைய தினத்தில் மக்கள் பொது ஊரடங்கை கடைபிடிக்குமாறும், மேலும் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சிறிய மற்றும் பெரிய கடைகள், ரெயில் நிலையங்கள், விமான போக்குவரத்து, பஸ் போக்குவரத்து, டாஸ்மாக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று திருவள்ளூரில் உள்ள முக்கிய பகுதிகளான திருவள்ளூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம், தேரடி, பஜார் வீதி, திருவள்ளூர்-திருப்பதி சாலை, காக்களூர் சந்திப்பு பகுதி, டோல்கேட், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, திருவள்ளூர்-செங்குன்றம் சாலை, சி.வி. நாயுடு சாலை, ஜெ.என் சாலை, உழவர் சந்தை பகுதி என மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல திருவள்ளூர் வீரராகவர் கோவில், திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட அந்த பகுதியின் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருந்தது.

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளும் வெறிச்சோடியது. மேலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டீக்கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள் என திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.

இந்த ஊரடங்கின் காரணமாக திருவள்ளூர், மணவாளநகர், வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு திருமழிசை, புட்லூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், கீழச்சேரி, இருளஞ்சேரி, மப்பேடு சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

திருவள்ளுர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே தங்களை முடக்கிக் கொண்டு பொது ஊரடங்கிற்கு காலையில் இருந்தே ஒத்துழைப்பு அளித்தனர். இதன் காரணமாக அனைவரும் நேற்றைய பொழுதை தங்களின் வீட்டுக்குள்ளே கழித்தனர்.

பள்ளிப்பட்டு நகரம் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளை கொண்டது. அதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்ததாக காணப்படும். பள்ளிப்பட்டை சுற்றியுள்ள கிராம மக்களுடன், ஆந்திர மாநில கிராம மக்களும் தினசரி ஆயிரக்கணக்கில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இங்கு வருவது வழக்கம்.

எனவே பள்ளிப்பட்டு பஸ் நிலையம், பஜார் தெரு, மெயின் ரோடு, மூன்று சாலை சந்திப்பு ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் நேற்று மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லை.

தமிழக, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் ஓடவில்லை. கடைகள், ஓட்டல்கள், திரையரங்கம், இறைச்சி கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

இதேபோல எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சாலை, திருப்பதி சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன. மருந்து மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்து இருந்தது. மற்ற கடைகள் அனைத்தும் மூடி இருந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் காலை நேரத்தில் சிறுது நேரம் திறக்கப்பட்டன. மக்கள் கூட்டம் அலை மோதியதால் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடையை மூட சொல்லி அறிவுறுத்தியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் ஊத்துக்கோட்டையிலும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில வாகனங்களை ஊத்துக்கோட்டை மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சுகாதரத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.

பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் ஊத்துக்கோட்டை பணிமனையில் பஸ்கள் அணிவகுத்து நின்றன.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் ஆவடி-பூந்தமல்லி சாலை, ஆவடி புதிய ராணுவ சாலை, திருமுல்லைவாயல், பட்டாபிராம், உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், வணிக வளாகம், வீடுகள், முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் சென்று கிருமி நாசினி தெளித்தனர்.

அதேபோல் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டலம் சார்பில் போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சாலையோரம் பூட்டியிருந்த கடைகள், சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர். கிருமி நாசினி நிரப்பப்பட்ட லாரியிலிருந்து எந்திரம் மூலம் ஸ்பிரே அடித்தனர்.

பூந்தமல்லி பகுதியில் கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் முற்றிலும் மூடப்பட்டு இருந்தன. காலியாக உள்ள சாலையில் சிலர் இரு சக்கர வாகனங்களில் செல்பி எடுத்த படியும், செல்போனில் வீடியோ பதிவு செய்த படியும் சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

செங்குன்றம் பஸ்நிலையம், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் ஆந்திரா பஸ் அடுக்குமாடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையும் வெறிசோடியது. ஓட்டல்கள் மூட்டபட்டதால் சென்னை விமான நிலையத்தில் மதிய உணவு கிடைக்காமல் அவதிபட்ட விமான பயணிகளுக்கு உணவு பொட்டலம் தண்ணீர் பாட்டில்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக இளைஞர்கள் வழங்கினர்.

Next Story