மக்கள் ஊரடங்கு; மாவட்டம் முழுவதும் 11 ஆயிரம் கடைகள் அடைப்பு - பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை
பிரதமர்மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது வேண்டுகோளுக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு முற்றிலும் கடைபிடிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் 11 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
விருதுநகர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி நாடு முழுவதும் நேற்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மக்கள் ஊரடங்கை கடை பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக மக்கள் பிரதமரின் வேண்டுகோளின்படி மக்கள் ஊரடங்கை கடைபிடித்து கொரோனா பாதிப்பை தவிர்க்க ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் மாவட்டம் முழுவதும் கிராம, நகர்ப்புறங்களிலும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு மாவட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையொட்டி நேற்றுமுன்தினமே மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மக்கள் பொருட்களை கொள் முதல் செய்ய கடைவீதிகளிலும், காய்கறி மார்க்கெட்டுகளிலும் பெருமளவில் திரண்டனர்.
மக்கள் ஊரடங்கையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 28 கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நகர்,கிராமப்புறங்களிலும் பெட்டிக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. டீக்கடைகளும் மூடப்பட்டு இருந்தது. 930 ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தது. சிவகாசியில் 1,100 பட்டாசு ஆலைகள் செயல்படவில்லை. சிறு,குறு தொழில் நிறுவனங்களும் செயல்படவில்லை.
மாவட்டத்தில் 418 அரசுபஸ், 171 தனியார் பஸ்கள்,94 மினி பஸ்கள் ஓடவில்லை. 1,723 லாரிகளும்,3400 ஆட்டோக்களும் ஓடவில்லை.
விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 5.50 மணிக்குள் சென்னையில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்துசென்றன. அதன்பின்னர் பகல் நேர ரெயில்கள் எதுவும் வரவில்லை. பஸ், வாகனங்கள் ஓடாததால் பஸ்நிலையங்களும், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் வெறிச்சோடியது. பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்ததால் சாலைகளில் கார்,இருசக்கர வாகனங்களை பார்க்கமுடியவில்லை.
மக்கள் ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளாட்சி அமைப்பு தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். விருதுநகரில் வழக்கம்போல் தூய்மை பணியை மேற்கொண்ட பணியாளர்கள் பஸ்நிலையத்தில் கிருமிநாசினியை தெளித்தனர். கோவில் வளாகங்கள் அருகிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மருத்துவ சேவையை தொடர்ந்தனர்.
நேற்று மாலை 5 மணிஅளவில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு நின்றுகொண்டு கொரோனா தடுப்பு நவடிக்கையில் அற்பணிப்புடன் பணியாற்றி வரும் டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story