மாவட்ட செய்திகள்

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்; தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு - வெளிமாநில வாகனங்களுக்கு தடை + "||" + Corona preventive action intensity in Pondicherry Curfew if necessary Prohibition on offshore vehicles

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்; தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு - வெளிமாநில வாகனங்களுக்கு தடை

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்; தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு - வெளிமாநில வாகனங்களுக்கு தடை
புதுவைக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசிடம் ரூ.300 கோடி கேட்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக மக்கள் ஊரடங்கு உத்தரவு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று வீட்டைவிட்டு வெளியே வராமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர். முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனது வீட்டிலேயே அமர்ந்திருந்து போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமைகளை அவ்வப்போது கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரசின் ஆபத்தை உணர்ந்த மக்கள் தங்களை கட்டுப்படுத்தி வீட்டில் உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. புதுவையின் 4 பிராந்தியங்களும் கட்டுப்பாட்டில் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி நம்மை தனிமைப் படுத்தி கொள்வதுதான்.

இதனை உணர்ந்துதான் 144 தடை உத்தரவு நாளை (இன்று) முதல் பிறப்பித்து இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) இரவு 9 மணி முதலே தடை உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. தேவைப்பட்டால் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருந்து உபகரணங்கள் வாங்க மத்திய அரசிடம் ரூ.300 கோடி கேட்கப்பட்டுள்ளது. வேகமாக பரவும் நிலையில் உள்ள கொரோனா ைவரஸ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முற்றிலும் பரவுவதை தடுப்பதற்காக இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை வெளிமாநில 4 சக்கர வாகனங்கள் புதுவை யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வர அனுமதி உள்ள உள்ளூர் வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அதாவது புதுச்சேரியில் இருந்து பாகூர், நெட்டப்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர், காலாப்பட்டு போன்ற பகுதிகளுக்கும், காரைக்காலில் இருந்து அம்பகரத்தூர், விழுதியூர் போன்ற பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்லலாம். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லை.

தவிர்க்க வேண்டும்

அரசு வாகனங்களும், அத்தியாவசிய பொருட்களான பால், உணவுப்பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரும் வாகனங்கள் அதற்குரிய ரசீதுகளை காண்பித்தால் அனுமதிக்கப்படும். இந்த தடை உத்தரவு இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது.

பொதுமக்கள் முக்கியமான காரணமின்றி வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி அரசு எடுக்கும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்ைக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.