இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் கொரோனா பாதித்தவர்கள் வருவதை தடுக்க தனுஷ்கோடி கடலில் தீவிர கண்காணிப்பு


இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் கொரோனா பாதித்தவர்கள் வருவதை தடுக்க தனுஷ்கோடி கடலில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 5:00 AM IST (Updated: 23 March 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து அகதிகள்,கடத்தல்காரர்கள் போர்வையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வருவதை கண்காணிக்க தனுஷ்கோடி கடலில் 3 கப்பல்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் கூடாமல் இருப்பதற்காக வருகிற 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கபட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகம், நூலகம், ரெயில் நிலையம் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ராமேசுவரத்திற்கு மிக அருகமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால், இலங்கையில் இருந்து அகதிகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை கண்காணிக்கும் பணி தொடங்கியது.

மேலும் கொரோனா பாதிப்புடன் வரும் கப்பல்கள் மற்றும் படகுகளை தடுத்து நிறுத்தி கண்காணிக்கும் பணியிலும், கடத்தலை தடுக்கும் வகையிலும் ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரையிலான இந்திய கடலில் வழக்கத்தை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தனுஷ்கோடி கடல் பகுதியில், நேற்று முதல் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 2 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதில் ஒரு கப்பல் தனுஷ்கோடி அருகே உள்ள 1-வது மணல் திட்டு பகுதியில் இருந்து 5-வது மணல் திட்டு வரை இந்திய கடலில் ரோந்து சுற்றியபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

மற்றொரு ஹோவர் கிராப்ட் கப்பல் தனுஷ்கோடி முதல் ராமேசுவரம் வரை இந்திய கடலில் தீவிர ரோந்து சுற்றி வருகிறது. மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிவேக கப்பல் ஒன்றும் தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு, சந்தேகப்படும்படி படகுகள், நபர்கள் வருகின்றனரா என்று இந்திய கடல் பகுதிக்குள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story