வாடிப்பட்டி அருகே மது குடித்த அண்ணன்-தம்பி சாவு: நண்பருக்கு தீவிர சிகிச்சை


வாடிப்பட்டி அருகே மது குடித்த அண்ணன்-தம்பி சாவு: நண்பருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 23 March 2020 5:15 AM IST (Updated: 23 March 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே மதுகுடித்த அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன் அலுவலகம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன்கள் சிவகுமார் (வயது 39), வினோத்குமார் (30).

அண்ணன்- தம்பி 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தங்களது நண்பர் தங்கப்பாண்டி (22) என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் கவனித்து 3 பேரையும் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிவகுமார் இறந்தார். நேற்று காலை 6 மணியளவில் வினோத்குமாரும் பரிதாபமாக இறந்துபோனார்.

தங்கப்பாண்டியை ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிவகுமார், வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவு, அவர்கள் குடித்த மது ஆகியவற்றில் ஏதோ விஷமாகி அவர்கள் 2 பேர் உயிரைகுடித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஒருவேைள விஷம் கலந்த மதுவை குடித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இதி்ல் சிவகுமார் தச்சுவேலை செய்து வந்தார். அவருக்கு விவேகாதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பலியான அவருடைய தம்பி வினோத்குமார் டிரைவராக இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story