கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்; 31-ந் தேதி வரை பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 9 மாவட்டங்களுக்கு ‘சீல்’


கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்; 31-ந் தேதி வரை பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 9 மாவட்டங்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 22 March 2020 11:42 PM GMT (Updated: 22 March 2020 11:42 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை ‘சீல்’ வைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இந்த பகுதிகளில் இருந்து யாரும் உள்ளே வரவோ அல்லது வெளியேறவோ முடியாது.

பெங்களூரு, 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்று உலகையே அதிரவைத்து கொண்டு இருக்கிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. நேற்று பிரதமர் மோடி வேண்டுகோளின் பேரில் நாடு முழுவதும் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையொட்டி நேற்று பிற்பகல் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கொரோனா தடுப்பு உயர்மட்ட செயல்படை ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அந்த படையின் உறுப்பினர்களான துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மருத்துவ கல்வி மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. கர்நாடகத்தில் நாளையும் (அதாவது இன்று) பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து சேைவ ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோ, வாடகை கார்களுக்கு தடை இல்லை. குளுகுளு பஸ்களின் சேவை வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்வது என்று தீர்மானித்துள்ளோம்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், கலபுரகி, மைசூரு, தார்வார், குடகு, பெலகாவி, மங்களூரு ஆகிய 9 மாவட்டங்கள் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுகின்றன. அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும். அரசு அலுவலகங்கள் வழக்கம்ேபால் செயல்படும். கர்நாடக சட்டசபை கூட்டம் திட்டமிட்டப்படி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, குடகு உள்பட 9 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே வரவோ முடியாது.

மேலும் 9 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும்? என்னென்ன சேவைகள் கிடைக்காது? என்று அரசு விளக்கம் அளித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ள பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், தட்சிணகன்னடா (மங்களூரு), கலபுரகி, மைசூரு, பெலகாவி, சிக்பள்ளாப்பூர், தார்வார், குடகு ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள், பட்டறைகள், கிடங்குகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத நிறுவனங்கள் மூடப்படும். தொழிலாளர்களை உள்ளடக்கிய நிறுவனங்கள் மொத்த தொழிலாளர்களில் ஒரு நாளைக்கு 50 சதவீதம் பேரை மட்டும் பயன்படுத்த வேண்டும். சுழற்சி முறையில் தொழிலாளர்களை பணிக்கு பயன்படுத்த வேண்டும். பணியாற்றும்போது, உரிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுழற்சி முறையில் வரும் விடுமுறைக்கு சம்பளத்தை வழங்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்தபடியே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் குளுகுளு வசதியுடன்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேைவ நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட 9 மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ இயக்கப்படாது.

அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளான உணவு, கடைகள், பால், பழங்கள், காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி, சந்தைகள், அனைத்து வகையான சரக்கு போக்குவரத்து போன்றவற்றிற்கு தடை இல்லை.

போலீஸ், தீயணைப்பு நிலையங்கள் செயல்படும். அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், தபால் சேவைகள் தொடர்ந்து நடைபெறும். மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை.

வங்கி, ஏ.டி.எம்., தொலைபேசி சேவைகள் பாதிக்கப்படாது. மருந்து கடைகள், மருத்துவ உபகரண கடைகள் திறந்திருக்கும். உணவகங்களில் இருந்து உணவுகளை வாங்கி செல்ல தடை இல்லை. ஆன்-லைனில் ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை வீடுகளுக்கு சென்று வழங்கலாம்.

வேளாண்மை, மீன்வளம், பட்டு, தோட்டக்கலை, கால்நடை தொடர்பான கடைகள் மற்றும் சந்தைகள் திறந்திருக்கும். அரசு சார்பில் செயல்படும் உணவகங்கள் திறந்திருக்கும். இந்த கட்டுப்பாடுகள் மக்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்துவதாக இருந்தால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இவற்றை தளர்த்த முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு மாநில அரசு தெரிவித்து உள்ளது.

Next Story