மக்கள் ஊரடங்கால் மும்பை வெறிச்சோடியது


மக்கள் ஊரடங்கால் மும்பை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 22 March 2020 11:58 PM GMT (Updated: 22 March 2020 11:58 PM GMT)

மக்கள் ஊரடங்கால் நேற்று மும்பை வெறிச்சோடியது.

மும்பை, 

பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று ஒருநாள் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் மாலை 5 மணிக்கு வீட்டு வாசல் முன் வந்து கரவொலி எழுப்பி கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தி இருந்தார்.

பிரதமரின் ஊரடங்கு அழைப்பிற்கு பல மாநில அரசுகளும் ஆதரவு அளித்தன. இதில் மராட்டியத்தில் பிரதமர் மோடி அழைப்புவிடுத்த ஊரடங்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று மும்பையில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

எல்லா இடங்களிலும் ஓட்டல்கள், மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் டாக்சி, ஆட்டோக்களும் ஓடவில்லை. பொதுமக்களும் வீடுகளைவிட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். அவசர தேவைகளுக்கு செல்பவர்களின் வசதிக்காக மட்டும் குறைவான அளவில் பெஸ்ட் பஸ்களும், மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டன. எனினும் பஸ், ரெயில்கள் பயணிகள் இன்றி காலியாகவே இயக்கப்பட்டன.

மக்கள் ஊரடங்கால் நேற்று மும்பை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. எப்போது வாகன நெரிசலுடன் காணப்படும் மேற்கு, கிழக்கு விரைவு சாலைகள் கூட ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

இந்தநிலையில் மாலை 5 மணிக்கு பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாசலில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பினர். மேலும் இசைவாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

இதுகுறித்து தாதரை சோ்ந்த் கிஷோர் கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள் அவர்களது உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றி வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், பத்திரிகையாளர்களும் விடுமுறை இன்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் வீட்டு வாசலில் வந்து ஒலி எழுப்புகிறோம்’’ என்றார்.

மக்கள் ஊரடங்கை அடுத்து நேற்று மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மும்பை முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களை வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர். இதேபோல ரெயில்நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தேவையில்லாமல் பொதுமக்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் ரெயில்நிலையங்களில் பிரதான வாசல்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ரெயில்நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நேற்று தானே, அம்பர்நாத், கல்யாண், பால்கர், வசாய், நவிமும்பை ஆகிய மும்பையையொட்டி உள்ள பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் நேற்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

Next Story