கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உத்தவ் தாக்கரே அனுபவம் மீது கேள்வி எழுப்புவதா? - பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உத்தவ் தாக்கரே அனுபவம் மீது கேள்வி எழுப்புவதா? - பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு
x
தினத்தந்தி 23 March 2020 5:39 AM IST (Updated: 23 March 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உத்தவ் தாக்கரே அனுபவம் மீது கேள்வி எழுப்புவதா என பாரதீய ஜனதாவை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.

மும்பை, 

பாரதீய ஜனதா மூத்த தலைவர் நிரஞ்சன் தவ்காரே தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், “தற்போதைய மோசமான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு தேவை. அனுபவம் இல்லாத முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தேவையில்லை” என கூறியிருந்தார்.

இதற்கு சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசை ஒழிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக உழைத்து வருகிறார். அவர் திறமையானவரா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

தற்போதைய நிலையை தேவேந்திர பட்னாவிஸ் எவ்வாறு வித்தியாசமாக கையாண்டு இருப்பார்? அவர் வைரசை விழுங்கியிருப்பாரா? அல்லது அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை கொண்டு வைரசை மிரட்டி அமைதியாக்கி இருப்பாரா?

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் பழிவாங்கும் வைரசை கொன்றது போலவே, கொரோனா வைரசையும் திறம்பட சமாளிக்கும்.

பீமா-கோரேகாவ் வன்முறை, சாங்கிலி வெள்ளப்பெருக்கு மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மாநில பொருளாதாரம் பாதிக்கப்பட்ட சமயங்களில் பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு எப்படி நிலைமையை கையாண்டது என்பதை நாடே பார்த்தது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்ற வலுவான மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக தேசிய தலைநகரம் பற்றி எரிந்தது.

அதே நேரத்தில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிலைமையை திறமையாக கையாண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story