‘மக்கள் ஊரடங்கு’ ; விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


விழுப்புரம் காமராஜர் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.
x
விழுப்புரம் காமராஜர் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.
தினத்தந்தி 23 March 2020 11:43 AM IST (Updated: 23 March 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடந்த ‘மக்கள் ஊரடங்கையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

விழுப்புரம், 

சீனாவில் உருவாகி இன்று உலகையே முடக்கிப்போட்டிருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், அதற்காக 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

இதனால் நேற்று முன்தினமே பெரும்பாலான பொதுமக்கள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளுக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக கடைவீதிகள், மார்க்கெட் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பின்படி நேற்று இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள், ஊரடங்கை கடைபிடித்தனர். தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் ‘மக்கள் ஊரடங்கு’ கடைபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்தனர். மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர். ஒரு சிலர் மட்டும் காலை வேளையில் பால் வாங்குவதற்காகவும், டீ குடிப்பதற்காகவும் மற்றும் அத்தியாவசிய தேவைக்காகவும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். இதனால் காலை 8 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் சற்று இருந்தது. அதன் பிறகு அவர்களிடம் போலீசார் அறிவுறுத்தியதின்பேரில் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டுச்சென்றனர். காலை 8 மணிக்கு பிறகு வெளியில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

இந்த மக்கள் ஊரடங்கையொட்டி ஏற்கனவே அரசு அறிவித்தபடி அரசு போக்குவரத்துக்கழகங்களின் பஸ்கள் அனைத்தும் நேற்று ஓடவில்லை. விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நாள் ஒன்றுக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலம், ஆந்திரா மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 3,600 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று இயக்கப்படாமல் அந்தந்த போக்குவரத்துக்கழக பணிமனைகளிலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்களும் ஓடாததால் அவை பெட்ரோல் பங்க்குகளிலும், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எப்போதும் அதிக பஸ் போக்குவரத்தும், பொதுமக்கள் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களும் பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டன.

அதேபோல் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் என அனைத்து ரெயில்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவித்ததால் ரெயில்களும் ஓடவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வெறிச்சோடின.

இதுதவிர கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் லாரிகள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரமாகவும், காலிமனை பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மற்ற வாகனங்கள் அனைத்தும் அந்தந்த நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதன் காரணமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் எதுவும் செல்லாமல் வெறிச்சோடியது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஏற்கனவே கடந்த 16-ந் தேதி முதல் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதுபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஜவுளிக் கடைகள், நகை கடைகளும் மூடப்பட்ட நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்கள் கேட்டுக்கொண்டதன்படி வணிகர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் முழுவதும் முழு அடைப்பு செய்து வீட்டிலேயே இருந்து கொரோனா வைரஸ் தடுப்புக்காக தங்களது பங்களிப்பை அளித்தனர்.

இதனால் ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடிகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாரச்சந்தைகள், டாஸ்மாக் கடைகளும் மூடிக்கிடந்தன.

ஆனால் மருத்துவமனைகள், மருந்து கடைகள், ஆவின் பால் நிலையங்கள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. அதுபோல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறந்திருந்தன. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டது.

மேலும் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்ப வராததால் அவை வெறிச்சோடியே கிடந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அம்மா உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் பலர் அம்மா உணவகத்திற்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு பசியை போக்கினர். இதுதவிர வள்ளலார் அருள் மாளிகை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்ததால் விழுப்புரம் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை மற்றும் மார்க்கெட் வீதிகள் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், வானூர், மரக்காணம், விக்கிரவாண்டி, மடப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர், மயிலம் உள்பட மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர்.

இவ்வாறு கடைகள் அடைப்பு மற்றும் அனைத்து வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக மாவட்டம் முழுவதுமே அமைதியான சூழ்நிலை ஏற்பட்டதோடு மக்கள் நடமாட்டமின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

மேலும் அண்டை மாநில எல்லைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழகம்- புதுச்சேரி மாநில எல்லைகளான கெங்கராம்பாளையம், பட்டானூர், அனுமந்தை ஆகிய எல்லைப்பகுதிகளை மூடும் வகையில் அங்குள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தினர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையாதவாறு இருக்க அவர்கள் வந்த வாகனங்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

அதே நேரத்தில் மாநில எல்லைகளில் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தபடி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் தகுந்த அறிவுரைகளை கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஊரடங்கு நடவடிக்கையால் பொதுமக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Next Story