வெளிநாடு, பிற மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் - விடுதி உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாடு, பிற மாநிலத்தவர்கள் விவரங்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர்,
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். வேலூர் மாவட்டத்துக்கு வெளிநாடு மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்த பலர் மருத்துவம், வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருகை தருகிறார்கள். சிலர் தங்கும் விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்து அதன்பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள்.
விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாடு, பிறமாநிலங்களை சேர்ந்தவர்களின் விவரங்களை தங்கும் விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் அவர்களை அனுமதித்த 1 மணி நேரத்திற்குள் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி 1077 மற்றும் அலுவலக தொலைபேசி 0416-2258016 என்ற எண்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் அந்த நபர்கள் கொடுக்கும் முகவரி உண்மையானதா என்று உரிண ஆவணங்களை பெற்று சரிபார்த்து கொள்ள வேண்டும். பின்னர் அவர்களின் முகவரி, பயண விவரம், அவர்களோடு பயணம் செய்தவர்கள் விவரம், தொலைபேசி எண், ரத்தமாதிரி விவரங்கள், எந்த நோக்கத்திற்காக வந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் எவ்வளவு நாட்கள் விடுதியில் தங்குவார்கள் என்ற விவரம், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தால் அந்த மருத்துவமனையின் விவரம், தங்கும் விடுதியில் இருந்து செல்லும் நாள், நேரம் ஆகியவற்றை தொலைபேசியில் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்காதது கண்டறியும் பட்சத்தில் அந்த விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story