கோவையில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி


கோவையில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 March 2020 3:30 AM IST (Updated: 23 March 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதையடுத்து ஆங்காங்கே சாலையோரங்களில் இளநீர், தர்பூசணி, குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளது.

இதையடுத்து கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவில்லை. இருந்தாலும் கோவையில் வெயில் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணி அளவில் காற்று வீசத்தொடங்கியது. அப்போது வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. இதைத்தொடர்ந்து லேசான சாரலில் தொடங்கிய மழையானது, கன மழையாக மாறியது. இந்த கோடை மழை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

கனமழையின் காரணமாக கோவை-அவினாசி சாலை, மேட்டுப்பாளையைம் சாலை, சத்தி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் சாலையில் ஆறாக ஓடியது. பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. திடீரென பெய்த கோடை மழை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தங்கள் வண்டிகளை பஸ்நிறுத்தம், டீக்கடைகளில் முன்பு நிறுத்திவிட்டு, மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர். பின்னர் மழை விட்டதும் புறப்பட்டு சென்றனர்.

கோவையை அடுத்துள்ள துடியலூர், கவுண்டம்பாளையம், குருடம்பாளையம், தொப்பம்பட்டி, பன்னிமடை, சோமையாம்பாளையம், நஞ்சுண்டாபுரம், தடாகம், கணுவாய் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சுற்றுவட்டார குளங்களுக்கு தண்ணீர் வந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குட்டை தூர்வாரும் பணி நடைபெற்றது. தற்போது பெய்த மழையால் அந்த குட்டைக்கு தண்ணீர் வந்தது. தொடர்ந்து மழை பெய்தால் குளம் நிரம்பும் என்றும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயா்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் விவசாயிகள் கூறினர். இந்த திடீர் மழையால் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

கோடை வெயில் வாட்டி வதைத்ததுக்கு மத்தியில் பெய்த கனமழை காரணமாக கோவையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story