கொரோனா பரவலை தடுக்க கோவை ரெயில் நிலையம் மூடப்பட்டது - முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்


கொரோனா பரவலை தடுக்க கோவை ரெயில் நிலையம் மூடப்பட்டது - முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்
x
தினத்தந்தி 23 March 2020 10:15 PM GMT (Updated: 23 March 2020 5:53 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க கோவை ரெயில் நிலையம் மூடப்பட்டது. முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை 31-ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க, அனைத்து ரெயில்களும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை வழியாக தினமும் 70-க் கும் மேலான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்கள் நிறுத்தப் பட்டு உள்ளதால் கோவையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர் களில் இருந்து கோவைக்கும் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதற்கிடையே அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் கோவை ரெயில்நிலையம் நேற்று மூடப்பட்டது. மேலும் பார்சல் முன்பதிவும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதி இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப் பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது எப்படி? என்று ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

வருகிற 31-ந்தேதி வரை முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் மூடப்பட்டு இருக்கும். முன்பதிவு ரெயில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை 31-ந் தேதிக்கு பிறகு முன்பதிவு கவுண்ட்டர்களில் பெற்றுக்கொள்ளலாம். ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை மாற்றிக்கொள்ள 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story