நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 142 பேர் கண்காணிப்பு - கலெக்டர் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 142 பேர் கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 March 2020 4:15 AM IST (Updated: 24 March 2020 12:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 142 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கூறினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் முழுவதும் தானாகவே முன்வந்து மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்த பொதுமக்களுக்கு நன்றி. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடந்த 1-ந் தேதி முதல் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி நீலகிரிக்கு வந்தவர்கள் 142 பேர்.

விமான நிலையங்களில் இருந்து வந்த 44 பேர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த 98 பேர் என மொத்தம் 142 பேரின் பெயர், முகவரி, செல்போன் எண் விவரங்கள் பெறப்பட்டு உள்ளது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை. இருந்தாலும், அவர்களது வீடுகளிலேயே தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 142 பேரின் வீடுகள் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட இருக்கிறது. அதில் அவர்கள் எத்தனை நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்ற விவரம் இடம்பெறும்.

அவர்கள் வெளியே வர வேண்டாம். தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் இருப்பவர்களை யாரும் சந்திக்கக்கூடாது. இந்த ஸ்டிக்கர்களை புகைப்படம் எடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு தயாராகி வருகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு தனி வார்டுகளை ஏற்படுத்தவும், அவசர நேரத்தில் அவைகளை அரசே எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாம்ராஜ்நகர், மலப்புரம், வயநாடு ஆகிய 3 மாவட்ட கலெக்டர்கள் தங்களது எல்லை பகுதிகளை மூட நடவடிக்கை எடுத்து உள்ளனர். பொதுமக்கள் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் 1 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மருந்தகங்கள், ரே‌‌ஷன் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கும். தேவையில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். திருமண நிகழ்ச்சிகள் மிக குறைவான நபர்களோடு நடத்தவும், இல்லையென்றால் தேதியை தள்ளி வைக்கவும் வேண்டும். துக்க நிகழ்ச்சியில் அதிகமான ஆட்கள் சேரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உடனிருந்தார்.

Next Story