நெல்லையில் இயல்புநிலை திரும்பியது: பஸ்கள் இயக்கம் பாதியாக குறைப்பு - ரெயில் பயணிகளுக்கு பரிசோதனை
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நெல்லையில் இயல்புநிலை திரும்பியது. எனினும் பஸ்கள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டது. மும்பையில் இருந்து நெல்லை வந்த ரெயிலில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை,
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால், அது மேலும் பரவுவதை தடுக்க, நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பஸ், ரெயில் போன்றவை இயக்கப்படாததால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனாலும் அனைத்து ரெயில்களும் வருகிற 31-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பின்னர் நேற்று காலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
ஆனாலும் பஸ்களின் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டது. குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால், தொலைதூர பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை புதிய பஸ் நிலையம், டவுன் பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வழக்கம் போல் ஓடின. எனினும் அங்கு பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், சில பஸ்களில் பயணிகளின் கூட்டமும் குறைவாகவே இருந்தது.
இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால், பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரையிலும் பஸ்களை வழக்கம்போல் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து அரசு உத்தரவுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
வருகிற 31-ந்தேதி வரையிலும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே மும்பையில் இருந்த நெல்லைக்கு புறப்பட்டு வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11.30 மணி அளவில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரெயிலில் குறைவான பயணிகளே வந்தனர். அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை நடத்தினர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அந்த ரெயில் முழுவதையும் கிருமிநாசினி மூலம் ரெயில்வே பணியாளர்கள் சுத்தம் செய்தனர். நேற்று நெல்லை ரெயில் நிலையம் வழியாக எந்த ரெயிலும் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பெரும்பாலான ஆட்டோ டிரைவர்களும் வருமானம் இழந்து தவிக்கின்றனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ‘தினமும் காலை, மாலையில் மாணவ-மாணவிகளை பள்ளி, கல்லூரிக்கு அழைத்து செல்வோம். இதன்மூலம் எங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைத்தது. தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு விட்டதால் காலை, மாலையில் வேலை இல்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், போக்குவரத்தை தவிர்க்கின்றனர். இதனால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம்’ என்றனர்.
Related Tags :
Next Story