கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: வெளிநாட்டில் இருந்து நெல்லை வந்த 158 பேர் தீவிர கண்காணிப்பு - கலெக்டர் ‌ஷில்பா தகவல்


கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: வெளிநாட்டில் இருந்து நெல்லை வந்த 158 பேர் தீவிர கண்காணிப்பு - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 7:32 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து நெல்லை வந்த 158 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ‌ஷில்பா கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நெல்லை,

நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் கடந்த 21-ந்தேதி இரவு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்து உள்ளார்.

ஆஸ்பத்திரிக்கு வருகிற நோயாளிகள் 3 வகையாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். வருகிற நோயாளியின் வெளியூர், வெளிநாடு பயண விவரம், சளி, இருமல், காய்ச்சல் ஆகிய விவரம் சேகரிக்கப்படும். இதில் சந்தேகம் ஏற்பட்டால் அவரை தனி வார்டில் சேர்த்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா உறுதி செய்யப்பட்டால் சிறப்பு வார்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

கடந்த 30 நாட்களாக வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 158 பேர் விவரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களை, தங்களது வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு ஆலோசனைகள் கூறி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உள்ளாட்சி களப்பணியாளர்கள், அதிகாரிகள் கண்காணித்து தினமும் தகவல் அளித்து வருகிறார்கள். ஆனால், இவர்களில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. இதுதவிர விட்டுப்போனவர்களின் விவரங்களை கிராம நிர்வாக அலுவலர், தலையாரி, பஞ்சாயத்து செயலர், சுகாதார ஆய்வாளர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வி‌‌ஷயத்தில் போலீசாரின் உதவியும் கேட்கப்பட்டு உள்ளது.

கடந்த 30 நாட்களில் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வந்திருப்பவர்கள் தங்களது விவரத்தை உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து செயலர், சுகாதார பணியாளர்கள் இவர்களில் யாரிடம் வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம்.

வெளிநாட்டில் இருந்தோ, வெளி மாநிலத்தில் இருந்தோ வந்திருக்கும் தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதால் ஏன் தகவல் தெரிவிக்க வேண்டும்? என்று கேட்கலாம். கொரோனா பாதிப்பு சிலருக்கு 14 நாட்கள் கழித்தே தெரியவரும். எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து, அது வெளியில் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பழகும் நபர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாவட்டம் முழுவதும் பொது சுகாதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. கிருமி நாசினி தெளிப்பு மற்றும் வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.

தொற்று கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். இதன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 அடுக்கு முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருந்து கடைகளில் முகக்கவசம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், அந்த கடைகளை மூட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் கொரோனா வைரஸ் அறிகுறி என்ற பெயரில் 8 முதல் 10 பேர் வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நமது அண்டை மாவட்டங்களாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லைகள் வழியாக நெல்லை மாவட்டத்துக்கு வருகை தருகிறவர்களின் விவரங்கள் அந்தந்த சோதனை சாவடிகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் நெல்லை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சோதனை சாவடிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் தவிர பிற வாகனங்களை திருப்பி அனுப்பி விடுவதால், இவ்வாறு வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 இடங்கள் சிகிச்சை அளிக்க அடையாளம் காணப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் ஒன்றும் தயார் நிலையில் உள்ளது. இவற்றின் மூலம் மொத் தம் 400 படுக்கை வசதி, செயற்கை சுவாச கருவி வசதியுடன் தயார் நிலையில் உள்ளது.

பெரிய ஆஸ்பத்திரிகளில் 25 சதவீத படுக்கை வசதியை தயார் நிலையில் வைத்திருக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். எனவே, தேவையின் அடிப்படையில் வார்டுகள், படுக்கை வசதிகள் பயன்படுத்தப்படும். பெரிய தனியார் ஆஸ்பத்திரி படுக்கை வசதிகளும் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story