திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு - கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 March 2020 4:00 AM IST (Updated: 24 March 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசுக்காக சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை, திருச்சி, கோவை போன்ற விமான நிலையங்கள் வழியாக 123 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 70 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்யாறு சிப்காட் வளாகம் ஊழியர்களின் நலன் கருதி வருகிற 31-ந் தேதி வரை ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வருவாய்த்துறை மருத்துவக் குழு, போலீசார்ஆகிய குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் நடமாடக்கூடாது. பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும். இது தான் கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான சிறந்த சிகிச்சை ஆகும். தற்போது சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கான ஆய்வக பரிசோதனை முடிவு 24 மணி நேரத்தில் கிடைக்கும்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு வார்டு 24 மணி நேரம் செயல்படக் கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சகீல்அகமது, இணை இயக்குனர் (நலப்பணிகள்) பாண்டியன், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story