திருப்பத்தூர் வந்த மலேசிய நாட்டினருக்கு கொரோனா பரிசோதனை


திருப்பத்தூர் வந்த மலேசிய நாட்டினருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 23 March 2020 10:15 PM GMT (Updated: 23 March 2020 9:02 PM GMT)

திருப்பத்தூருக்கு வந்த மலேசிய நாட்டினருக்கு மருத்துவ குழுவினரால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிபாடு மற்றும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதனால் அப்பகுதிகளை காண பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் தங்குவதற்காக இங்கு பல விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒரு தனியார் விடுதியில் மலேசிய நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருப்பதாக திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, அந்த குடும்பத்தினரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்து சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் மலேசியா செல்லும் வரை தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் கடந்த10-ந்தேதி மலேசியாவில் இருந்து திருச்சி வந்ததாகவும், அன்று முதல் ராமேசுவரம், மதுரை, பொள்ளாச்சி, கோவை, திருப்பதி, காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story