ரெயில் நிலையங்கள் மூடல்: புறநகர் மின்சார ரெயில்கள் இயங்காததால் பயணிகள் அவதி - பராமரிப்பு பணிகள் தீவிரம்
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன. புறநகர் மின்சார ரெயில்கள் ஓடாததால் பயணிகள் அவதி அடைந்தனர். ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
சென்னை,
கொரோனா வைரசை தடுக்கும் விதமாக வரும் 31-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தையும் ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. டிக்கெட் கவுண்ட்டர்களும் மூடப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
இதையடுத்து தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. ரெயில்கள் இயக்கப்படாததால் நேற்று காலை தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை எழும்பூர், சென்டிரல், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களும், அதில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரெயில் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டதால் நேற்று மின்சார ரெயில்கள் ஓடவில்லை. இதனால் புறநகர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
பிளஸ்-1 மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று காலை செய்வதறியாது திகைத்தனர். பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
இதனால் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் சென்னையில் நேற்று மிக குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டாலும் ரெயில்வே ஊழியர்கள், ரெயில் நிலையங்களில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
ரெயில் நிலையங்கள் அனைத்திலும் பயணிகளுக்கு அனுமதி மறுத்து மூடப்பட்டதால், ரெயில் நிலையங்கள் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ரெயில்வே சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அனைத்து நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறை, கழிப்பறைகள் உள்ளிட்டவைகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மேலும் சுத்தம் செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினியை சுகாதார ஊழியர்கள் தெளித்தனர்.
ரெயில்கள் இயக்கப்படாததால் சென்னை எழும்பூர், மூர்மார்க்கெட், சென்டிரல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகளும், ரெயில் நிலைய பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story