ஆந்திராவுக்குள் செல்ல தமிழ்நாடு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில் தடையில்லாமல் தமிழகத்துக்குள் வரும் வெளிமாநில வாகனங்கள்


ஆந்திராவுக்குள் செல்ல தமிழ்நாடு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில் தடையில்லாமல் தமிழகத்துக்குள் வரும் வெளிமாநில வாகனங்கள்
x
தினத்தந்தி 24 March 2020 3:49 AM IST (Updated: 24 March 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்குள் செல்ல தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் பிற மாநில வாகனங்கள் வேலூர் மாவட்டத்துக்குள் தடையில்லாமல் வந்து செல்கின்றன.

காட்பாடி, 

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வனத்துறை, காவல்துறை சார்பிலும், மெட்டுக்குளம் பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்..

மேலும் பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகிறார்கள். மேலும் அங்கு பயணிகள் கைகளை கழுவி சுத்தப்படுத்தி செல்ல குடிநீர் தொட்டியும், கைகழுவும் திரவமும் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வரும் பயணிகள் அனைவரும் கைகளை கழுவி செல்கிறார்கள்.

இந்த நிலையில் ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் கார்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவை மாநில எல்லையில் தடை செய்யப்படவில்லை. வாகனங்கள் வழக்கம்போல் வேலூர் மாவட்டத்துக்கு வந்து செல்கின்றன.

ஆனால் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சித்தூர் மாவட்ட எல்லையான பள்ளூரில் தடுத்து நிறுத்தப்படுகிறது. ஆந்திரா மாநில வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழக வாகனங்களை அங்குள்ள போலீசார் திருப்பி அனுப்புகிறார்கள்.

இதுகுறித்து சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டதற்கு, வெளிமாநில வாகனங்களை தமிழக எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்துவது தொடர்பாக எங்களுக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை.

எங்களின் உயர்அதிகாரிகள் உத்தரவிட்டால் தான் நாங்கள் பிறமாநில வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முடியும். அதிகாரிகள் எவ்வித உத்தரவும் தெரிவிக்காததால் பிறமாநில வாகனங்களை வழக்கம்போல் வேலூர் மாவட்டத்துக்குள் அனுமதித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Next Story