புதுச்சேரிக்குள் நுழைய தடை: கடலூரில் இருந்து சென்னைக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கம்


புதுச்சேரிக்குள் நுழைய தடை: கடலூரில் இருந்து சென்னைக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 11:12 PM GMT)

புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடலூரில் இருந்து சென்னைக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டது. வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரிக்குள் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதித்துள்ளதாக அந்த மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இதையடுத்து வெளிமாநில வாகனங்களை புதுச்சேரிக்குள் நுழைய போலீசார் தடை விதித்தனர். இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் முள்ளோடை பகுதியில் இருந்து திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் புதுச்சேரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு சிலர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கே திரும்பி சென்றனர்.

மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கம்

நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் செல்லவில்லை. நேற்று மக்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில், அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

ஆனால் புதுச்சேரியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டன. அதாவது கடலூர், மாளிகைமேடு, கோலியனூர், விழுப்புரம், திண்டிவனம் வழியாகவும் மாற்றுப்பாதையில் சென்னைக்கு இயக்கப்பட்டன.

பஸ்கள் நிறுத்தம்

இது பற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரமாக வைத்துள்ளோம். இது தவிர கடலூரில் இருந்து சென்னைக்கு 140 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் நேற்று 85 பஸ்கள் மட்டுமே இயக்கினோம். புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மாறாக மாளிகைமேடு வழியாக மாற்றுப்பாதையில் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

இது தவிர திருப்பதி, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன என்றார். இதேபோல் தனியார் பஸ்களும் புதுச்சேரிக்கு இயக்கப்படவில்லை. புதுச்சேரி எல்லையை தாண்டி உள்ள தமிழக பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அதில் வேலைக்கு செல்வோர் சென்று வந்தனர்.

கடலூர் பஸ் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் அரசு, தனியார் பஸ்கள் இல்லாததால் அந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்பட்டது.


Next Story