தினமும் 1 கோடி மக்கள் பயணிக்கும் மும்பை நகரின் உயிர்நாடி முடங்கியது


தினமும் 1 கோடி மக்கள் பயணிக்கும் மும்பை நகரின் உயிர்நாடி முடங்கியது
x
தினத்தந்தி 23 March 2020 11:57 PM GMT (Updated: 23 March 2020 11:57 PM GMT)

மும்பையில் மின்சார ரெயில்கள், மெட்ரோ, மோனோ ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் 1 கோடி பயணிகளின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி விட்டது.

மும்பை, 

கண்ணுக்கு தெரியாத கொடிய கொரோனா கிருமிகளால் மும்பை பெருநகரம் முடங்கி போய் கிடக்கிறது. மும்பை நகரின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் மின்சார ரெயில்கள் அடியோடு நிறுத்தப்பட்டதால், அந்த ரெயில்கள் தண்டவாளத்தில் ஆங்காங்கே ஓய்வெடுக்கின்றன.

மும்பையில் தினமும் 3 ஆயிரம் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுவது வழக்கம். இதில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதும் வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர் அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள். தற்போது வேலையும் இல்லை, மின்சார ரெயில்களும் இல்லை என்பதால் மும்பை நகரின் உயிர் நாடியும் நின்று போய் விட்டதாக பயணிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

எப்போதும் பயணிகள் நெரிசல் மிகுந்த ரெயில் நிலையங்களுக்குள் செல்ல தற்போது யாருக்கும் அனுமதி இல்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு மின்சார ரெயில் சேவை முடங்கி இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 1974-ம் ஆண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மின்சார மற்றும் நெடுந்தூர ரெயில்கள் 20 நாட்கள் முடங்கி கிடந்தன. அதன்பிறகு தற்போது கொரோனா கிருமிகள் மின்சார ரெயில்களை தண்டவாளத்தை விட்டு நகர விடாமல் செய்து விட்டன.

வருகிற 31-ந் தேதி வரை ரெயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதன் பிறகும் ரெயில்கள் இயங்குமா? என்பதற்கு கொரோனா தான் பதில் சொல்ல வேண்டும்.

இதேபோல மும்பை நகரில் மெட்ரோ, மோனோ ரெயிலிலும் ஏராளமான பயணிகள் பயணித்து வருவது வழக்கம். அந்த ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

தினமும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் உள்ளூர், புறநகர் சேவைகளில் ஈடுபட்டு வந்த மின்சார ரெயில்கள், மெட்ரோ, மோனோ ரெயில்கள் தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதன் மூலம் இந்த பயணிகளின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி கிடக்கிறது.

Next Story