கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்வு; மராட்டியம் முழுவதும் ஊரடங்கு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது


கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்வு; மராட்டியம் முழுவதும் ஊரடங்கு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 24 March 2020 12:27 AM GMT (Updated: 24 March 2020 12:27 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் கிடைக்கும் எனவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மும்பை, 

உலகை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாடாய் படுத்தி வருகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டியத்தில் தான் 97 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் மராட்டியத்தில் 2 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மாநில மக்களை மட்டுமின்றி அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து மராட்டிய அரசு நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மாவட்ட எல்லைகள் மூடல்

இன்று(நேற்று) நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கொரோனா வைரசின் பரவலை தடுக்க அனைத்து மாவட்டங்களின் எல்லைகளையும் மூட உள்ளோம்.

பொது இடங்களில் கூட்டம் கூடுவதை எந்த வகையிலும் அரசு பொறுத்துக்கொள்ளாது. அவசர தேவை ஏற்பட்டால் தவிர, யாரும் தெருக்களில் சுற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசின் வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.

ஊரடங்கு உத்தரவின்போதும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ சேவைகள், மருந்து பொருட்கள் அரசுக்கு கிடைக்கும்.

போரில் வெற்றி பெற வேண்டும்

இந்த நேரத்தில் நாம் முழுமையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அல்லது பின்னர் வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படலாம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்கு நமக்கு கூடுதல் மனித சக்தி தேவைப்படுகிறது. இதற்காக அங்கன்வாடி ஊழியர்கள், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஐரோப்பிய நாடுகளின் தலைவிதி

அத்தியாவசிய சேவைகளை மட்டுமே அனுமதிப்போம். இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை நாம் சரிசெய்யாவிட்டால், சில ஐரோப்பிய நாடுகளின் தலைவிதி நமக்கு ஏற்பட நேரிடும்.

மாநில எல்லைகள் கிட்டத்தட்ட முழுவதுமாக மூடப்பட்டு உள்ளன. உணவு பொருட்கள், பால் மற்றும் மருந்துகள் வினியோகம் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு தொடரும். வேறு எந்த இயக்கமும் அனுமதிக்கப்படாது.

உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை மற்றும் விநியோகம் போன்ற விவசாய சேவைகள் தொடர்பான கடைகளும் தொடர்ந்து இயங்கும்.

எல்லா மத வழிபாட்டு தலங்களும் மூடப்படும். அங்கு பூஜை, பிரார்த்தனை நடக்கலாம். ஆனால் மக்கள் கூட்டம் அனுமதிக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story