பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்த காய்கறிகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாகியது


பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்த காய்கறிகள்  ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாகியது
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 24 March 2020 8:30 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் 3 மணி நேரத்தில் காய்கறிகள் விற்று தீர்ந்தன.

நெல்லை, 

பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் 3 மணி நேரத்தில் காய்கறிகள் விற்று தீர்ந்தன. மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

காய்கறி கடைகளில்.... 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

பாளையங்கோட்டை மகராஜநகரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை சந்தைக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். அங்கு மொத்தம் 150 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் காலையிலேயே காய்கறிகள் குவிந்தன. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலையிலேயே சந்தைக்கு வந்தனர். இதனால் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

3 மணி நேரத்தில் விற்றன 

பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு காய்கறிகளை வாங்கி சென்றனர். காலை 5 மணிக்கு சந்தை தொடங்கியது. 8 மணிக்குள் அனைத்து காய்கறிகளும் விற்பனையானது. அதாவது 3 மணி நேரத்தில் காய்கறிகள் விற்றுத் தீர்த்தன. அதன் பிறகு வந்த பொதுமக்கள் காய்கறிகள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பண்டிகை காலங்களில் விற்பனையானது போல் காய்கறிகள் விற்பனையானது. நேற்று மட்டும் சுமார் 15 டன் முதல் 20 டன் காய்கறிகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அரசு நிர்ணயித்த விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என உழவர் சந்தை அதிகாரி ராமச்சந்திரன், உதவி அதிகாரி திருமுருகன் ஆகியோர் கண்காணித்தனர்.

உழவர் சந்தை வரும் பொதுமக்கள் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிச் சென்றனர். அங்கு மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story