கொரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த நெல்லை தனியார் லாட்ஜில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு


கொரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த  நெல்லை தனியார் லாட்ஜில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 2:58 PM GMT)

கொரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த நெல்லை தனியார் லாட்ஜில் பணியாற்றிய 8 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.

நெல்லை, 

கொரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த நெல்லை தனியார் லாட்ஜில் பணியாற்றிய 8 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள். அவர் சென்ற இடங்கள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

கண்காணிப்பு 

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல், இரும்மல், சளி உள்ளிட்ட அறிகுறிகளோடு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் கொரொனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவரிடம் டாக்டர்கள் நடத்திய விசாரணையில் அவர் துபாயில் இருந்ததும் பின்னர் நெல்லை வந்து தங்கியிருந்ததும், ராதாபுரம் சென்றதும் தெரியவந்தது. நெல்லையில் அவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் 3–க்கும் மேற்பட்ட தினங்கள், தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும் வள்ளியூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது. நாங்குநேரி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் தெரிவித்து உள்ளார்.

அதன்படி நெல்லையில் அவர் தங்கியிருந்த தனியார் லாட்ஜ்யை நேற்று முன்தினம் சுகாதாரத்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர். கொரோனோ பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த லாட்ஜ் முற்றிலும் சுத்தப்படுத்தவேண்டும் என்பதால் ஏப்ரல் 20–ந்தேதி வரை அதை மூடவேண்டும் என்று கூறினார்கள். அதன்படி அந்த லாட்ஜ் மூடப்பட்டு உள்ளது. அங்கு பணியில் இருந்த 8 பேரை அழைத்து சென்று பரிசோதனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் 28 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது 

மேலும் அவர் சென்ற பாளையங்கோட்டையில் உள்ள பொதிகை நகர் கனரா வங்கி காலனியில் உள்ள உறவினர் வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதை அடையாளப்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் தனிமைப்படுத்துதல் வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அந்த பகுதியில் அவர் சென்ற வீடுகளில் எல்லாம் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அந்த வீட்டில் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Next Story