தூத்துக்குடி மாவட்டத்தில் மளிகை, பலசரக்கு கடைகள் 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


தூத்துக்குடி மாவட்டத்தில் மளிகை, பலசரக்கு கடைகள் 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 24 March 2020 10:00 PM GMT (Updated: 24 March 2020 3:42 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மளிகை, பலசரக்கு கடைகள் 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மளிகை, பலசரக்கு கடைகள் 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

24 மணி நேரம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த ஊரக மற்றும் நகர பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமும், தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரலாம். பொதுமக்களின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மளிகைக்கடை, மார்க்கெட், பலசரக்கு கடை ஆகியவை 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் பொருட்கள் வாங்க வந்தால் போதும். அனைவரும் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் கடைகளில் ஒரு மீட்டர் தொலைவில் இருந்து தான் பொருட்கள் வாங்க வேண்டும். ரே‌ஷன் கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முக்கிய தேவைக்காக வாகனங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். போலீசார் கேட்டால் உரிய காரணங்களை தெரியப்படுத்த வேண்டும். காரணம் சரியாக இருந்தால் வாகனங்கள் வெளியே செல்ல போலீசார் அனுமதி வழங்குவார்கள்.

நோட்டீஸ் ஒட்டும் பணி 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 220 பேர் வீடுகளில் வைத்து தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. அவர்களின் கைகளில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். மார்ச் 1–ந் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்தவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ள கிராம அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் விவரங்களை சேகரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்துவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் உள்ள 220 பேரை தவிர மேலும் 300 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருநது திரும்புபவர்கள் தங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமல் உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்று சென்று வருகிறார்கள். அப்படி செல்ல கூடாது. அவர்கள் கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு விவரங்கள் தெரியப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முககவசங்கள் கிடைக்க... 

தூத்துக்குடிக்கு எந்த நாட்டில் இருந்து கப்பல்கள் வந்தாலும் கப்பலில் இருப்பவர்கள் வெளியே வர அனுமதி இல்லை. பொருட்கள் மட்டுமே இறக்க அனுமதி உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 7 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 5 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 2 பேரின் ரத்த மாதிரிகள் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னர் தான் கொரோனாவா இல்லையா என்பது தெரியவரும். கிருமி நாசினி மற்றும் முககவசங்கள் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் மகளிர் திட்டம் சார்பில் கடைகள் திறக்கப்பட்டு முக கவசங்கள், கிருமிநாசினி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story