நெல்லை மாவட்ட எல்லைகளும் மூடல்: குமரி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி


நெல்லை மாவட்ட எல்லைகளும் மூடல்:  குமரி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி
x
தினத்தந்தி 25 March 2020 3:30 AM IST (Updated: 24 March 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் குமரி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில், 

நெல்லை மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் குமரி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

மேலும் இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–

இடைவெளி 

குமரி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. கொரோனா பரவலை தடுக்க வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். அதேபோல 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மருந்துக்கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு மக்கள் செல்லலாம். ஒரே இடத்தில் 5–க்கு மேற்பட்டவர்கள் செல்லக்கூடாது. இதனை நடைமுறைப்படுத்த போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

மாவட்ட எல்லைகளும் மூடல் 

மாநில எல்லைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சரக்கு வாகனங்கள் சென்றுவர தடை இல்லை. தற்போது நெல்லை மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. குமரி மாவட்ட மக்கள் எந்த மாவட்டத்துக்கும் செல்ல முடியாது. இதிலும் சரக்கு வாகனங்கள் சென்றுவர தடை இல்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தை உணராமல், மக்கள் விடுமுறை காலங்களை போல் ஜாலியாக வெளியில் சுற்றித்திரிகிறார்கள். அவ்வாறு மக்கள் சுற்றித்திரியக்கூடாது. அப்படி சுற்றித்திரிபவர்கள் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு, பிறரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். எனவே அவ்வாறு சுற்றித்திரிபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது உயிரையும், உங்களுடைய குடும்பத்தினர் உயிரையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த வைரஸ் நமக்கு இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். உங்களிடம் இந்த நோய் இல்லாவிட்டாலும் உங்களுக்குள் வைரஸ் இருக்கலாம். உங்கள் மூலமாக பிறருக்கு பரவ மிக அதிக வாய்ப்புண்டு.

நடவடிக்கை 

எனவே என்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டாம். நீங்கள் எதை தொட்டாலும் வைரஸ் இருக்க முடியும். நீங்கள் யாரை சந்தித்தாலும் அவருக்குள் வைரஸ் இருக்க முடியும். அதனால் வரும் காலம் மிகவும் கவனமாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டிய காலம்.

மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனாலும் இதில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். சிலர் அதை மீறுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த வைரஸ் பரவுவதை தடுத்து சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அருகில் இருந்தார்.

Next Story