வெளிநாட்டில் இருந்து சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்த 61 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது போலீசார் பாதுகாப்பு


வெளிநாட்டில் இருந்து சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்த 61 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது  போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 March 2020 4:30 AM IST (Updated: 24 March 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்த 61 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சங்கரன்கோவில், 

வெளிநாடுகளில் இருந்து சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்த 61 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதேபோல் ஸ்பெயினில் இருந்த வந்த குடும்பத்தினர் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு 


சங்கரன்கோவிலில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சளி, இருமல், காய்ச்சல் இருந்த பெண் ஒருவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல் கேரளாவில் கூலி வேலை பார்த்த, சிவகிரி அருகே பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால் அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சங்கரன்கோவில் வந்துள்ளவர்கள் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர். குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் இருந்து சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு திரும்பியுள்ள ஒரு குடும்பத்தினரும் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

61 வீடுகளுக்கு நோட்டீஸ் 


இதைத்தொடர்ந்து நேற்று கேரளாவில் இருந்து சங்கரன்கோவில் புதுமனை தெருவிற்கு வந்துள்ள நபரின் வீட்டில் நகராட்சி சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் அந்த வீடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் கூறியதாவது:–

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த 10 நபர்களும், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 32 நபர்களும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவிப்பு வழங்கப்பட்டது. கைகளை நன்கு சோப்பு கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. அனைத்து வீடுகளிலும் கொரோனா தனிமைப்படுத்தும் சம்பந்தமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கேரளாவில் இருந்து புதுமனை புதுத்தெருவிற்கு வந்துள்ள நபரின் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

இதேபோல் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமபுற பகுதிகளைச் சேர்ந்த 18 வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை செய்யப்பட்டது.

கேரளா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். பொதுவாக நோய் தொற்று நோய் இருப்பது உடனே தெரியாது. எனவே வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் மற்றும் வெளிமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பியவர்களும் தாங்களாகவே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் நல்லது. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நகராட்சி சுகாதார துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கலாம். ஏனெனில் மேலும் அவை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story