பிளஸ்-2 தேர்வு நிறைவடைந்தது: கரூரில் மாணவ- மாணவிகள் பிரியா விடை பெற்றனர்


பிளஸ்-2 தேர்வு நிறைவடைந்தது: கரூரில் மாணவ- மாணவிகள் பிரியா விடை பெற்றனர்
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 6:34 PM GMT)

கரூரில் பிளஸ்-2 தேர்வு நிறைவடைந்ததையொட்டி மாணவ, மாணவிகள் பிரியா விடை பெற்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடந்தது. இதில் நேற்று கடைசி தேர்வு நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக கடைசி தேர்வு நடக்குமா? என கேள்வி எழுந்த நிலையில், இந்த தேர்வு அறிவித்தபடி நடத்தப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு 40 மையங்களில் நேற்று நடந்தது.

இதையொட்டி காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வந்து படித்த பாடங்களை திருப்பி பார்த்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், கைகளை நன்றாக கழுவிய பிறகே மாணவ, மாணவிகள் பலரும் தேர்வறைக்குள் சென்றனர். சில மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்ததையும் காண முடிந்தது.

9,900 பேர் தேர்வு எழுதினார்கள்

வெளியிடங்களில் இருந்து பஸ்சில் வருபவர்களின் நலன் கருதி இந்த தேர்வானது காலை 10.30 மணிக்கு தொடங்கியது. வினாக்களை படித்து பார்த்தல், விவரங்களை சரிபார்த்தலுக்காக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 10.45 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். மதியம் 1.45 மணிக்கு தேர்வு நிறைவு பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் கபீர், சிவராமன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு போதிய வசதிகள் உள்ளதா? என்று கேட்டறிந்தனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் 10,435 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 9,900 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 535 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிரியா விடை பெற்றனர்

தேர்வு முடிந்ததும் வெளியே வந்த மாணவ, மாணவிகள் வினாத்தாளில் ஏற்பட்ட சந்தேகங்கள் பற்றியும், எதிர்காலத்தில் கல்லூரியில் எந்த படிப்பினை தேர்வு செய்து படிப்பது? மருத்துவம்-என்ஜினீயரிங் துறைக்கு செல்ல வேண்டும் என்றால் எத்தகைய வழிமுறையினை மேற்கொள்வது? என்பன உள்ளிட்டவற்றை தங்களது ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் பள்ளி படிப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர்.

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்ததும் வினாத்தாளை தூக்கி வீசியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ஒருவர் மீது ஒருவர் மை தெளித்தும், வண்ணப்பொடிகளை தூவியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பள்ளி படிப்பின் நீங்காத நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பல மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்து ஆர்ப்பரித்ததையும் பார்க்க முடிந்தது. மேலும் சிலர் ஒரு வழியாக பிளஸ்-2 வை கடந்துவிட்டோம் என கூறி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்கள் தங்கள் நண்பர்களிடம் இருந்து, மாணவிகள் தோழிகள் இருந்தும் பிரியாவிடை பெற்று, அங்கிருந்து சென்றனர்.

Next Story