ஊட்டி, கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்
144 தடை உத்தரவால் ஊட்டி, கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி,
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்தாலும் மற்றவர்களுடன் 3 அடி தூரம் இடைவெளி விட்டு விலகலை கடைபிடிக்க வேண்டும்.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் மக்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 144 தடை உத்தரவால் வருகிற நாட்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்ற பீதியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஊட்டியில் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்தனர்.
ஊட்டி சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தையில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் மக்கள் வந்து சாலையோரங்களில் நிறுத்தி விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கினர். குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, காலிப்பிளவர், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரை வகைகள், பழங்களை வாங்கிச் சென்றனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானதால், நுழைவுவாயில் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் வைக்கப்பட்டன.
காய்கறிகள் வாங்கி விட்டு மற்றொரு நுழைவுவாயில் வழியாக சிலர் சென்ற பின்னர் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். பலர் முகக்கவசம் அணிய வில்லை. அங்கு பொதுமக்கள் கை கழுவுவதற்கு தண்ணீர், கிருமிநாசினி வைக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமானதால் கை கழுவ முடியாத நிலை ஏற்பட்டது. கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட வில்லை.
உழவர் சந்தையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் ஊட்டி ஏ.டி.சி., கமர்சியல் சாலை, புளுமவுண்டன் சாலை, ஐந்துலாந்தர் பகுதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி போக்குவரத்துக்கழக மண்டலத்தில் வழித்தடங்களுக்கு சென்று விட்டு அரசு பஸ்கள் மாலை 6 மணிக்குள் அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டு வந்து நிறுத்தும்படி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் வெளியிடங்களுக்கு செல்கிறவர்கள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதற்கேற்ப அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோத்தகிரி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேரூராட்சி அதிகாரிகளிடம் மார்க்கெட்டில் உள்ள 4 நுழைவு வாயில்களிலும் தண்ணீர் மற்றும் சோப்பு வைத்து அதற்கென ஒருவரை நியமித்து மார்கெட்டிற்கு வரும் அனைத்து பொதுமக்களும் தங்களது கைகளை சுத்தமாக கழுவிய பின்னரேஅனுமதிக்க வேண்டும். அவ்வாறு 4 நுழைவு வாயில்களிலும் ஊழியர்களை நியமிப்பதில் சிரமங்கள் ஏதேனும் இருப்பின் 2 நுழைவு வாயில்களை மூடி மற்ற 2 வாயில்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தினார். மேலும் கோத்தகிரி பகுதியில் சுகாதார பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி மூலம் மார்கெட்டிலுள்ள 4 நுழைவு வாயில்களிலும் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவுவதற்காக தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் அறிவுரைப்படி மார்கெட்டிலுள்ள அனைத்து கடைகளின் முன்புறமும் தண்ணீர் வாளி மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்களது கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று காலை முதலே பொதுமக்கள் மார்க்கெட் பகுதியில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆனால் 2 நுழைவு வாயில்கள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் முக்கிய நுழைவு வாயில் ஒன்றை மட்டுமே பயன்படுத்தியதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.
நோய் தொற்றை தடுக்க பொதுமக்கள் இடைவெளி காக்க வேண்டும் என்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக ஒருவருக்கொருவர் இடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story