கொரோனா பாதிப்பு எதிரொலி: அரசு அலுவலக வாசல்களில் கை கழுவும் வசதி - வெளியாட்களுக்கு அனுமதி ரத்து


கொரோனா பாதிப்பு எதிரொலி: அரசு அலுவலக வாசல்களில் கை கழுவும் வசதி - வெளியாட்களுக்கு அனுமதி ரத்து
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 7:42 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அனைத்து அரசு அலுவலக வாசல்களில் கை கழுவுதவற்கான வசதி அமைக்கப்பட்டு அனைவரும் முழுமையாக கை கழுவிய பின்னரே அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் அரசு அலுவலகங்களில் வெளியாட்களுக்கு அனுமதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளன. தொடர்ந்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மாவட்டங்கள் முழுவதும் சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் இதுபோன்ற கடினமான நேரத்தில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து அரசு அலுவலக வாயில்களில் முறையாக கை கழுவுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள பேசின்களில் கைகளை கழுவிய பின்னரே பணிக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை பணியாளர்கள் நேற்று முதல் பின்பற்றினார்கள்.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை இணை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) கே.பி.சத்தியமூர்த்தி கூறியதாவது:&

தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது போல், அரசு அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவிய பின்னரே அலுவலகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வசதிகளை செய்து தர பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், துணைப் பத்திரப்பதிவு அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களின் வாசல்களில் கை கழுவுவதற்காக வசதி செய்து தரப்பட்டு உள்ளன. அத்துடன் சுகாதாரத்துறையின் அறிவுரையின் பேரில் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

‘கைகளைக் கழுவுவோம், தொற்று நோய்கள் வராமல் தடுப்போம்’ என்ற வாசகத்துடன், கை கழுவுவதற்கான வசதி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 முதல் 20 வினாடிகள் கையை முறையாக எப்படி கழுவுவது? என்பது குறித்து படவிளக்கத்துடன் விளம்பர பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கு என்று தனியாக ஒவ்வொரு வாசலிலும் ஒரு காவலர் மூலம், அனைத்து பணியாளர்களும் கையை கழுவிய பின்னரே அலுவலகத்துக்குள் செல்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள் கைகளை கழுவுவதற்காக மட்டும் 20 பேசின்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை அனைவரும் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அனைத்து அலுவலகங்களிலும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அத்தியாவசியமாக செயல்படும் அலுவலகங்கள் மட்டும் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தேவையில்லாமல் வரும் வெளியாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமான தேவைக்கு வருபவர்களுக்கு மட்டும் முறையான அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும், கைகளை நன்கு கழுவிய பின்னர் அரசு அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தேவையில்லாமல் வருகிற 31-ந்தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வருவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story