சொந்த ஊருக்கு திரும்ப முடியாததால், வெளிமாநில தொழிலாளர்கள் மன்னார்குடியில், பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்


சொந்த ஊருக்கு திரும்ப முடியாததால், வெளிமாநில தொழிலாளர்கள் மன்னார்குடியில், பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 7:47 PM GMT)

சொந்த ஊருக்கு திரும்ப முடியாததால் வெளிமாநில தொழிலாளர்கள் மன்னார்குடியில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் மத்திய பிரதேசம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையோரங்களில் பட்டறை அமைந்து அரிவாள், கோடாரி, கத்தி உள்ளிட்ட இரும்பு பொருட்களை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் தாக்கம் தமிழகத்திலும் தென்பட்டதால் கடந்த 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்று அரிவாள்களை விற்பனை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர் திரும்புவதற்காக நேற்று முன்தினம் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

பள்ளியில் தங்க வைப்பு

ஊரடங்கு உத்தரவையொட்டி மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ரெயில் வராததால் அவர்கள் ரெயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த மன்னார்குடி வருவாய் அதிகாரிகள், தொழிலாளர்களை மீட்டு மன்னார்குடி மேலவீதியில் உள்ள அரசு நகராட்சி பள்ளியில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.மேலும் அவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க பள்ளி வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் வெளிமாநில தொழிலாளர்களை விரைவில் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story