வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிய 95 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தடை - கலெக்டர் தகவல்


வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிய 95 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தடை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 March 2020 4:30 AM IST (Updated: 25 March 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிய 95 நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது, என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா நோய் யாருக்கும் இல்லை. கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தனிக் கட்டிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதைத்தவிர வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை உள்பட 5 மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறி காணப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டத்துக்கு இதுவரை 107 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை.

முதல் கட்டமாக வந்த 12 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 95 நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் வீட்டில் அரசு ஊழியர் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். மேலும் வீட்டின் நுழைவு வாயிலில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்க தாசில்தார் தலைமையில் மருத்துவர்கள், சுகாதாரத்துைற, போலீசார் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காணொலி காட்சி மூலமும் அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வருபவர்களை தனிமைப்படுத்த வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஒரு மையம் அமைக்கப்பட உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கியிருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story