தஞ்சையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு: மருந்து கடைகளை நோக்கி மக்கள் படையெடுப்பு


தஞ்சையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு: மருந்து கடைகளை நோக்கி மக்கள் படையெடுப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 8:33 PM GMT)

தஞ்சையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருந்து கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர்.

தஞ்சாவூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டது. ஆனால் புதிதாக யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. விபத்து மற்றும் அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்பட்டது. புறநோயாளிகள் பிரிவு அனைத்தும் மூடப்பட்டன. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

மருந்து கடைகளை நோக்கி படையெடுப்பு

டாக்டர்களை தேடி தனியார் மருத்துவமனைகளுக்கு சென்ற இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி சென்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சத்தினால் முக கவசம் வாங்குவதற்கு மருத்து கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

தஞ்சையில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம் தட்டுப்பாடு நிலவுகிறது. ஓரிரு கடைகளில் மட்டும் முககவசம் இருக்கிறது. அதை வாங்குவதற்கு மருந்து கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதால் மருந்து மாத்திரை வாங்க ஏராளமானோர் மருந்து கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

நோயாளிகள் கருத்து

இது குறித்து தலைவலி, வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்ட நோயாளிகள் கூறும்போது, தஞ்சை நகரில் உள்ள எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் டாக்டர்கள் இல்லை என கூறி அனுப்பி வைக்கின்றனர். இதனால் நாங்கள் என்ன செய்ய முடியும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது நல்ல வி‌‌ஷயம் தான்.

ஆனால் விபத்து, மாரடைப்பை தவிர வேறு எந்த சிகிச்சைக்கும் எங்களிடம் வராதீர்கள் என டாக்டர்கள் கூறினால் ஏழை, எளிய மக்களால் என்ன செய்ய முடியும்?. காலையில் ஒரு சில மணிநேரம் புறநோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தால் நன்றாக இருக்கும். டாக்டர்களை பார்க்க முடியாததால் மருந்து கடைகளில் மருந்து. மாத்திரைகளை வாங்கி செல்கிறோம். இவைகளினால் எங்களது நோய்க்கு தீர்வு ஏற்பட்டால் நல்லது. இல்லையென்றால் வருகிற 31-ந் தேதி வரை வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

Next Story