கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம்


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம்
x
தினத்தந்தி 25 March 2020 4:40 AM IST (Updated: 25 March 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு ஆணையாளர் சதீஷ் முககவசம் வழங்கினார்.

சேலம்,

சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தநிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளும் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்களுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் வழங்கினார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையங்கள், பள்ளிகள், புனித தலங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், பொது சுகாதார வளாகங்கள், அங்கன்வாடி மையங்கள், அம்மா உணவகங்கள் மற்றும் வெளிப்புற பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தூய்மை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு

தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு துணியால் தயாரிக்கப்பட்ட முககவசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முககவசங்களை பயன்படுத்தும் போது அவற்றை துவைத்து வெயிலில் உலர வைத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியும்.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், ரவிசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரன், சித்தேஸ்வரன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story