போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த இன்ஸ்பெக்டர்


போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 24 March 2020 11:31 PM GMT (Updated: 24 March 2020 11:31 PM GMT)

போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

சென்னை, 

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் பாஸ்ட்புட் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் திருவள்ளூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்த அன்பழன் என்பவரது மகன் ஆகாஷ் (வயது 24) தனது நண்பர்கள் 5 பேருடன் சென்று சாப்பிட்டார். பின்னர் அவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தை தராமல் சென்றனர். இதை பார்த்த அங்கு இருந்த ஊழியரான திருவள்ளூரை சேர்ந்த பாபு என்கின்ற சதீஷ்குமார் (23) என்பவர் சாப்பிட்டதற்கான பணத்தை கேட்டார்.

பணம் தர மறுப்பு தெரிவித்த ஆகாஷ், பாபுவை தகாத வார்த்தையால் பேசி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தன் நண்பர்களுடன் தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பாபு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது தலையில் 25 தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாபு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தப்பி ஓடிய ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை பிடிக்க முயன்றனர். இதில் தலைமறைவான ஆகாஷ் திருவள்ளூரை அடுத்த மப்பேடு குன்னத்தூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ஆகாஷை சுற்றி வளைத்தனர். அப்போது திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரின் வாகன டிரைவரும் போலீசுமான கலைவாணன் என்பவரை ஆகாஷ் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தப்பியோட முயற்சி செய்த ஆகாஷை துப்பாக்கியால் காலில் சுட்டார்.

இதில் காயம் அடைந்த ஆகாஷை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story