மும்பையில் ஊரடங்கு உத்தரவால் கூலி தொழிலாளர்கள் பாதிப்பு
ஊரடங்கு உத்தரவால் மும்பையில் கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘இதே நிலை தொடர்ந்தால் நடந்தே சொந்த ஊருக்கு செல்வேன்’’ என தொழிலாளி ஒருவர் உருக்கமாக கூறினார்.
மும்பை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து வகையான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் அரசு நிறுவனங்கள் 5 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்து உள்ளது.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் மும்பையில் கட்டுமான பணியாளர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் போன்ற தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அத்தியாவசிய தேவைகளான உணவு பொருட்கள் வாங்க கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மும்பை கலினாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ரஞ்சன் என்ற தொழிலாளி கூறியதாவது:-
எனது சொந்த ஊர் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா. கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. எங்கள் ஒப்பந்ததாரர் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கி தந்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஞ்சித் என்ற கூலி தொழிலாளி கூறுகையில் ‘‘தொடா்ந்து மும்பையில் வாழ்க்கை நடத்த தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளேன். எங்களது சொந்த ஊருக்கு செல்லும் வகையில் அரசு உதவி செய்ய வேண்டும்’’ என உருக்கமாக கூறினார்.
வாடகை ஆட்டோ ஓட்டும் திலீப் பென்பான்சி என்பவர் கூறுகையில், ‘‘நான் கடந்த 15 ஆண்டுகளில் மும்பையில் இதுபோன்ற ஒரு நிலையை பார்த்தது இல்லை. இந்த மாத செலவுக்காக நண்பரிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி வைத்திருக்கிறேன்’’ என்றார்.
ஜித்தேந்திர யாதவ் என்ற கூலி தொழிலாளி, எங்களுக்கு வருமானமும் இல்லை, இங்கு வாழ போதிய பணமும் இல்லை. இந்த ஊரடங்கு தொடர்ந்தால் சைக்கிளிலோ அல்லது நடந்தோ சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என கண்ணீருடன் கூறினார்.
Related Tags :
Next Story