மும்பையில் ஊரடங்கு அமல் சாலையில் செல்பவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார் - வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என ஒலிபெருக்கியில் அறிவிப்பு
மும்பையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் சாலையில் செல்பவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். மேலும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, மற்ற அனைத்து கடைகள், நிறுவனங்கள், ஆலைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையில் மெட்ரோ, மோனோ மற்றும் மின்சார ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் பொதுமக்கள் பயணிக்க முடியாது. டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், நர்சுகள், வங்கி பணியாளர்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே அடையாள அட்டையை காட்டி பயணம் செய்ய முடியும்.
இதேபோல ஆட்டோ, டாக்சிகளிலும் பொதுமக்கள் அவசர தேவைகள் இன்றி பயணம் செய்ய முடியாது. ஆட்டோவில் ஒருவரும், டாக்சியில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மும்பையில் ஊரடங்கை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் முக்கிய சாலைகள் மட்டும் இன்றி குடிசைப்பகுதிகள், சிறிய தெருக்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தேவையில்லாமல் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என ஒலிப்பெருக்கில் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை கடுமையாக எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பினர்.
ஒரு சில இடங்களில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை பிடித்து போலீசார் லத்தியால் தாக்கிய சம்பவங்களும் நடந்தன.
Related Tags :
Next Story