கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்: சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், படித்து வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வருபவர்கள், படித்து வருபவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வருகிற 31-ந் தேதி வரை ரெயில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனவே ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் அந்த பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றனர். தனியார் ஆம்னி பஸ்களும் ஓடவில்லை. இதனால் மக்கள் அனைவரும் அரசு பஸ்களில் மட்டுமே பயணிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலர் கார்களிலும் பயணம் செய்தனர்.
குறிப்பாக சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். இதேபோல் பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதன் காரணமாக அனைத்து பஸ்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல் பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் திருவிழா கூட்டம்போல் காட்சியளித்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, ஈரோடு, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட அரசு பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறிச்சென்றதை காண முடிந்தது. இதுபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் அணி வகுத்து சென்றன. இவ்வாறு சென்ற வாகனங்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு உடனுக்குடன் சுங்கவரி வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதாலும், கூட்ட நெரிசல் காரணமாகவும் மோட்டார் சைக்கிள்களில் அதிகம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றதையும் காணமுடிந்தது.
இதையடுத்து சுங்கச்சாவடி அதிகாரிகள் விரைந்து சென்று வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யும் பணியை நிறுத்திவிட்டு இலவசமாகவும், அதே நேரத்தில் உடனுக்குடன் வாகனங்கள் செல்வதற்கும் அனுமதியளித்தனர். இருப்பினும் 2 மணி நேரம் இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்து அதன் பிறகே சீரானது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story