ஊரடங்குக்கு முன் வந்த 144 தடை உத்தரவு: கள்ளக்குறிச்சியில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின - டி.ஐ.ஜி. ஆய்வு
கள்ளக்குறிச்சியில் ஊரடங்குக்கு முன் வந்த 144 தடை உத்தரவினால் கடைகள் அடைக்கப்பட்டன, சாலைகள் வெறிச்சோடின. நிலைமையை டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,
இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அதனால் கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை 6 மணி ஆனதும் கடைகள் மூடப்பட்டன. 95 சதவீத பஸ்கள், கார்கள் ஓடவில்லை. ஆனால் ஆட்டோக்கள் மட்டும் இரவு 7 மணி வரை ஓடியது. அதேப்போல் ஒருசில இருசக்கர வாகனங்களும் ஓடின. மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த மக்கள் நடமாட்டம் சாலைகளில் இருந்தது.
இதனால் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு, மற்றும் முக்கிய சாலைகளில் வந்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து கலைந்து போகச்செய்தனர். பின்னர் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த மக்களையும் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறிச்சென்றனர். ஆனால் பஸ் நிலையத்தில், சேலம், சென்னை போன்ற வெளி ஊர்களில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்களும் கிராமத்திற்கு செல்லும் பஸ்களில் ஏறி சென்றனர்.சிலர் ஆட்டோவில் சென்றனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ஊரே அடங்கியது, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கு இருந்த மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கினார்.
Related Tags :
Next Story