கொரோனா பீதிக்கு இடையே கொடைக்கானலில், ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு ஜோடி - போலீசார் மடக்கி பிடித்தனர்


கொரோனா பீதிக்கு இடையே கொடைக்கானலில், ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு ஜோடி - போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 25 March 2020 3:45 AM IST (Updated: 25 March 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பீதிக்கு இடையே கொடைக்கானல் மலைப்பகுதியில், ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு ஜோடியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் கொடைக்கானலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டபோது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது.

அதனை, வெளிநாட்டுக்காரர் ஒருவர் ஓட்டி வந்தார். பின்னால் உள்ள இருக்கையில், மற்றொரு வெளிநாட்டு பெண் அமர்ந்து இருந்தார். அந்த ஆட்டோவை மறித்தபோது நிற்காமல் சென்று விட்டது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையை நோக்கி ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது.

இதுகுறித்து வெள்ளிநீர் வீழ்ச்சி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

வெளிநாட்டு ஜோடி

விசாரணையில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 55 வயதுடையவர் என்றும், பின்னால் அமர்ந்திருந்த பெண் 40 வயதுடைய போலந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும், கடந்த 17 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு ஆட்டோவில் வந்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் தங்கியிருந்தபடி அவர்கள் ஆட்டோவிலேயே வலம் வந்துள்ளனர். தங்களது நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த அந்த வெளிநாட்டு ஜோடி, அங்கு ஒரு ஆட்டோவை வாங்கியுள்ளனர். அந்த ஆட்டோவிலேயே கொடைக்கானலுக்கு வந்து அவர்கள் சுற்றுலா இடங்களை பார்வையிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் அவர்கள் கேரள மாநிலம் செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக கொடைக்கானலில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டபோது போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் அந்த ஜோடி சிக்கியது. இதனையடுத்து அந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் முயன்றனர். ஆனால் அதற்கு அவர்கள் ஒத்துழைக்காமல், மருத்துவக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், நகராட்சி கமிஷனர் நாராயணன், நகர்நல அலுவலர் ராம்குமார், வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அவர்கள் எங்கெங்கு சுற்றித்திரிந்தனர்?, எங்கு தங்கினார்கள்?, யார்? யாரை சந்தித்தார்கள்? என்பது குறித்து வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பீதிக்கு இடையே, வெளிநாட்டு ஜோடி கொடைக்கானலில் 17 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story