144 தடை உத்தரவு அமல்; 13 எல்லைகள் அடைப்பு


144 தடை உத்தரவு அமல்; 13 எல்லைகள் அடைப்பு
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 25 March 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 22-ந் தேதி முதல் மாவட்டமே முடக்கிவிடப்பட்டது.

நேற்று காலையில் இருந்தே பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. குறிப்பிட்ட ஊர்களுக்கு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கம் முழுமையான நிறுத்தப்பட்டது. லாரி, ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஆகியன இயக்கப்படவில்லை.

தமிழக அரசின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஆசனூர், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி, கொடுமுடி நொய்யல், நெரிஞ்சிப்பேட்டை, வெண்டிபாளையம், வரப்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், கொளப்பலூர், லட்சுமிநகர், விஜயமங்கலம் உள்பட 13 எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி வழியாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும், ஈரோட்டை சேர்ந்தவர்களை போலீசார் அனுமதித்தனர். ஆனால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈரோட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Next Story