உழவர் சந்தை வழக்கம்போல் செயல்படும், ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கிடையாது - கலெக்டர் கதிரவன் தகவல்
உழவர்சந்தை வழக்கம்போல் செயல்படும் என்றும், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கிடையாது என்றும் கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை நடப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். மேலும், ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிகமாக மார்க்கெட்டுக்கு வருகிறது. இதனால் வியாபாரிகள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனை மட்டும் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த மார்க்கெட் இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 6 மணிக்கு நிறைவடையும். அதுவும் காய்கறிகளை வாங்க வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். காலை 6 மணிக்குள் காய்கறிகள், பழங்களின் வியாபாரத்தை முடித்து கொள்ள வேண்டும். அதன்பிறகு மார்க்கெட் செயல்படாது.
நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து காய்கறிகள், பழங்களை வாங்கி கொள்ளலாம்.
உழவர் சந்தை வழக்கம்போல் செயல்படும். அங்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே கடைகள் அமைத்துகொள்ள அனுமதி வழங்கப்படும். அங்கும், ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பொதுமக்கள் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும். உழவர் சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைக்க அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story