ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர் கொரோனா வார்டில் அனுமதி


ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர் கொரோனா வார்டில் அனுமதி
x
தினத்தந்தி 25 March 2020 3:15 AM IST (Updated: 25 March 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு, 

ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் தங்கியிருந்த ஈரோடு புது மஜீத்வீதி, கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள வீடுகளின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், பொதுமக்களின் இடது கைகளில் முத்திரை குத்தப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான சுல்தான்பேட்டை மஜீத்வீதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் நேற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பேர் நேற்று பெருந்துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் இருந்து 2 பேர் தப்பி வெளியே சென்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, “கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியில் உள்ள 3 வழிகளும் மூடப்பட்டு உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. எனவே அங்கிருந்து யாரும் வெளியே செல்ல வாய்ப்பில்லை”, என்றனர்.

Next Story