ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடி வெறிச்சோடியது; மக்கள் வீடுகளில் முடங்கினர்


ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடி வெறிச்சோடியது; மக்கள் வீடுகளில் முடங்கினர்
x
தினத்தந்தி 25 March 2020 10:15 PM GMT (Updated: 25 March 2020 5:41 PM GMT)

ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினார்கள்.

தூத்துக்குடி, 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் பேரிடராக அறிவிக்கப்பட்டு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

தூத்துக்குடியில் நேற்று காலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், பால்கடைகள், பழக்கடைகள், மெடிக்கல்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்காக ஏராளமான காய்கறிகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்தது. இதனால் சுமார் 11 மணி அளவில் மார்க்கெட் பூட்டப்பட்டது. அதே போன்று ஏராளமானவர்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் சென்றபடி இருந்தனர். உடனடியாக போலீசார் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து சோதனை சாவடியை அமைத்தனர்.

அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் வழிமறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் எங்கு இருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர். அத்தியாவசியம் இல்லாத பணிக்காக செல்பவர்களை மீண்டும் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். போலீசாரின் தொடர் சோதனை காரணமாக மதியத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆங்காங்கே போலீஸ் வாகனங்களின் சைரன் ஒலி மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. முக்கிய சாலைகளில் தடுப்புகளை வைத்து போக்குவரத்து நடக்காமல் போலீசார் தடை ஏற்படுத்தினர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வழக்கமான பணிகள் தொடர்ந்து நடந்தன. சரக்குகள் குறைந்த அளவு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. தூத்துக்குடியில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பஸ்கள் ஓடாததால் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழை, கூலி தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், நரிக்குறவர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் இருக்கும் இடத்தை கண்டறிந்து இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி அரசு ஆஸ்பத்திரி வளாகம், புதிய பஸ் நிலையம், சத்திரம் தெரு ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

41 கண்காணிப்பு குழு அமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 41 குறுவட்டங்களில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் வருவாய் ஆய்வாளர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊரக வளர்ச்சிப்பிரிவு அலுவலர் ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழுவினர் தங்கள் குறுவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் துணையுடன், கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளில் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிவித்து ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளையும், கைகளில் முத்திரையிடும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story