ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள் அடைப்பு; தென்காசியில் சாலைகள் வெறிச்சோடின - போலீசார் தீவிர கண்காணிப்பு


ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள் அடைப்பு; தென்காசியில் சாலைகள் வெறிச்சோடின - போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 March 2020 3:45 AM IST (Updated: 26 March 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி தென்காசி மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள், வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி, 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எல்கைகள் மூடப்பட்டன.

தென்காசியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நேற்று காலையில் காய்கறி கடைகள் இறைச்சி கடைகள், மீன் கடைகள், மளிகை, பால் மற்றும் மருந்து கடைகள் திறந்து இருந்தன. சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள் வெறிச்சோடின. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலைகளில் வந்தவர்களை வீட்டிற்கு திரும்ப செல்ல வற்புறுத்தினர். முக கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் ஒலிபெருக்கி மூலம் தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு அறிவித்து சென்றனர். கூலக்கடை பஜார் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்தையொட்டி செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், லாரிகள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

ஊரடங்கை தீவிரப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான பால், காய்கறி, மருந்து உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 144 ஊரடங்கு உத்தரவை மீறி தேவையற்ற முறையில் வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மேலும் அவர் களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.

கடையம் மெயின் ரோட்டில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து வாகன ஓட்டிகளிடம் துண்டுபிரசுரம் வழங்கி, ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சுப்பையன், கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், சரசையன், ஏட்டுகள் ஜிஜிகுமார், மாரிமுத்து ஆகியோர் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளியில் தேவையில்லாமல் சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் அறிவுரை கூறினர். முன்னதாக கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, கடையம், ஆழ்வார்குறிச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஜீப்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Next Story