வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்த 514 பேர் வீடுகளில் தொடர் கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்த 514 பேர் வீடுகளில் தொடர் கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 25 March 2020 10:30 PM GMT (Updated: 25 March 2020 8:21 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்த 514 பேர் வீடுகளில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் காய்கறி கடைகள், மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை திறந்து உள்ளன. பொதுமக்கள் வெளியில் சென்றால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முககவசம், திரவ சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்டவை தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் இந்த பொருட்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களில் விற்பனை செய்வதற்காக புதிதாக கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு அரசு நிர்ணயித்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் போது ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க கூடாது. ஒரு வீட்டில் ஒருவர் வந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

வெளிநாடுகளுக்கு சென்று விட்டு தூத்துக்குடிக்கு வந்த 514 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் டாக்டர்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அழியாத மை மூலமாக ஒரு முத்திரை வைக்கப்படுகிறது. இதுவரை கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உரிய ஆய்வு நடத்தி, அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்துக்குள் வரக்கூடிய 13 எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அம்மா மருந்தகம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரிக்கப்பட்ட முககவசம், கைகழுவும் திரவம் உள்ளிட்டவை விற்பனை அங்காடியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

Next Story