திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு - போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொ.விஜயகுமார் கூறினார்.
ஆம்பூர்,
தமிழகத்தில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஆம்பூரில் 144 தடை உத்தரவு குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொ.விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா குறித்த உண்மை தகவல்களை பரப்பவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கிராமங்கள், குக்கிராமங்கள், வார்டுகள் தோறும் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக தலா 200 பேர் கொண்ட ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் மக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுடைய சந்தேகத்தை போக்கும் வகையில் உண்மை தகவல்கள் பகிரப்படும். அதன் மூலம் மக்கள் அச்சத்தை தவிர்க்கலாம்.
கொரோனா வைரஸ் குறித்து வதந்தியை உருவாக்குபவர்கள், அதை பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தங்களுக்கு வரும் தகவல்களின் உண்மை தன்மை குறித்து விசாரிக்காமல் தவறுதலாக பகிர்ந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கொரோனாவிற்கென ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகின்றது. பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை அந்த கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
144 தடை உத்தரவை செயல்படுத்துவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,100 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட எல்லை முழுவதுமாக மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு துறை வாகனங்கள் மட்டுமே பரிசோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்து செல்கின்றனர். அதனால் நகரின் முக்கிய தெருக்களும், சாலைகளும் கூட தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடி ‘சீல்’ வைக்கப்படும்.
பொதுமக்கள் பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும். அதனால் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொரோனாவை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story