அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் - அரசு உத்தரவு
மும்பையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மும்பை,
நிதி தலைநகரான மும்பையை கொரோனா வைரஸ் முடக்கி போட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏற்கனவே மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியான ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பெஸ்ட் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசலை நிரப்புமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி இருசக்கர வாகனங்கள், கார்களில் வெளியே வருவதை தடுக்கும் வகையில் இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில் போலீசார்
இதுகுறித்து காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் ரவி சைனி கூறுகையில், ‘‘எந்த வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்கிறது என்பதை கண்டறியும் வகையில் பெட்ரோல் பங்க்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட வேண்டும். எங்கள் பணியாளர்களால் அந்த பணியை செய்ய முடியாது’’ என்றார்.
இதேபோல பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி வெங்கட் ராவ் கூறுகையில், ‘‘90 சதவீத வாகன போக்குவரத்து நின்றுவிட்டது. எங்களுக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பெட்ரோல் பங்க்குகளை திறந்து வைக்க முடியாது. எனவே தேவையான இடங்களில் மட்டும் பெட்ரோல் பங்கை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற இடங்களில் பெட்ரோல் பங்க்குகளை மூட அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story